சாருமதி ரகுராமன் - வயலின்
ஈரோடு நாகராஜன் - மிருதங்கம்
ஹெச். ப்ரஸன்னா - கடம்
ஒரு மாத இடைவெளியில் மீண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அரங்கில் 23ஆம் தேதி வாசித்தேன்.
காயத்ரியின் சங்கீதம் பக்தியும் பாவமும் சரியான விகிதத்தில் இணைந்த, வேண்டிய இடங்களில் அழுத்தத்திற்கு குறைவில்லாத கலவை.
"நவ ராக மாலிகை" வர்ணத்துடன் அநுபல்லவியில் வேங்கடேசனாகிய திருமாலைத் தொழுது துவங்கியது அன்றைய மாலை.
ஒரு சிலரைப் போல், வர்ணம் பாடுவதை ஒரு
ஸம்ப்ரதாயமாகவோ அல்லது குரலுக்கு ஒரு பயிற்சியாகவோ மட்டும் கொள்ளாது, கீர்தனைகளில், ஒரு வரியை இரண்டாம் முறை பாடுகையில் இன்னும் மெருகேற்றி புதிய சங்கதியுடன் வழங்குவதைப் போன்ற முதிர்ந்த அணுகுமுறையோடு பாடவேண்டும். அப்போது தான் வர்ணம் என்பது வெறும் ஸ்வரக்கோர்வையாக மட்டுமல்லாமல், இராகத்தின் இலக்ஷணங்களையும் மனதைத்தொடும் பிரயோகங்களையும் உள்ளடக்கியதாகத் திகழும்; திகழ்ந்தது.
"நேனெந்து வெத குதுரா" என்ற ஹரிகாம்போதி கீர்த்தனையை காயத்ரி பாடியபோது அந்தத் தேடல் தாபம் அனைத்தும் குரலில் தளும்பியது.
ஒருமுறை த்யாகராஜரின் ஜயந்தி விழாவில் பாடியபோது டி.கே.ஜெயராமன் அந்த பாட்டில் எவ்வாறு சங்கதிகள் அமைந்துள்ளன என்று பாடிக்காண்பித்தார்.
"நான் ஒன்ன எங்கெல்லாம் தேடுவேண்டா ராமா... ஆகாசத்துல எல்லாம் தேடுவேனா... இல்ல.. பூமிக்கடில எல்லாம் தேடுவேனான்னு ஸங்கதி போட்டிருக்கார் பாருங்கோ" என்றார். அது என் மனதில் நிழலாடியது.
அடுத்து வந்தது ஆனந்த பைரவி. இந்த இராகத்தை ஆலாபனை செய்கையில், பெரும்பாலும் ச்யாமா சாஸ்திரியின் "மரிவேறேகதி"யின் சாயலின்றி வழங்குவது கடினம். ஆனால், அன்று இராகம் பாடிய விதத்திலேயே, இது வேறொன்று என உணர்த்தினார் காயத்ரி. வழக்கமான க ம பா என்றில்லாமல், பழைய ஸம்ப்ரதாய சங்கதி ஒன்றைப் பாடி நிறைவு செய்தார். சாருமதியும் தன் பங்கிற்கு இனிமையாக வாசித்தார்.
ஸ்ரீநிவாஸா என்ற புரந்தர தாசர் க்ருதியில் மத்யம கால ஸ்வரங்கள் அழகுடன் பவனி வந்தன.
அடுத்து, "நீ இரங்காயெனில் புகலேது" சிவனின் அடாணா கீர்த்தனையும் அதைத்தொடர்ந்து சற்றே கனமானதொரு சாவேரி ராக ஆலாபனை. அதற்கு அழுத்தம் சேர்க்கும்
விதமாக தெளிவான சஞ்சாரங்கள் கீழ் ஸ்தாயி பஞ்சமத்தில் அரங்கம் நிறைத்தன.
தீக்ஷிதரின் "ஸ்ரீ ராஜகோபால" கிருதியை "நாராயண தாரக திவ்யநாம பாராயண" என்னும் வரியில் உருக வைக்கும் நிரவலுடன் நேர்த்தியாக வழங்கினார். சாருமதியும் காயத்ரியின் கற்பனையை ஒட்டி நல்ல பங்களிப்பை அளித்தார்.
வாத்ய ஸங்கீதத்தில் மிகவும் பிரபலமான நவரஸ கானடா "நின்னு வினா" நல்ல விறுவிறுப்பாக இருந்தது. அந்தக் கீர்த்தனையை, கச்சேரி தொய்வில்லாமல் இருப்பதற்காகப் பாடாமல், அதிலும் பாவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடினார், காயத்ரி.
"நீடு கதலு வீனுலண்டு நிண்டீ உன்னதி ராமா" என்ற இடத்தைப் பாட சாஹித்ய கர்த்தாவைப் போன்றே
ராம பக்தியில் உருகினால் தான் முடியும்....
தொடர்ந்து பத்து நிமிடம் கல்யாணி ஆலாபனை. நல்ல கார்வை கொடுத்துப் பாடும்போதும், ஒரு சங்கதியையோ சஞ்சாரத்தையோ நிறுத்துமிடங்களிலும் ஸ்வர சுத்தமும் இராக பாவமும் மிளிர்ந்தன. சாருமதி சில இடங்களில் தன் குருவை ( ஸங்கீத கலாநிதி டி.என்.கிருஷ்ணன்) நினைவூட்டினார்.
ஜி.என். ஸார் நிறைய பாடிய, "நிஜதாஸ வரதா" எனும் பட்டணம் ஸுப்ரமண்ய ஐயர் கிருதி. இரண்டு களை முக்கால் இடத்தில் "புஜகாதிப ஸயனா... பூமிஜா ரமணா" என்று நிரவல், ஸ்வரம்.
நிரவலின் விசேஷத்தைச் சொல்லியே ஆகவேண்டும். நிஷாதத்தில் பல வேலைப்பாடுகளுடன் கீழ்க்கால நிரவல். அங்கிருந்து மேல் ஷட்ஜம், ரிஷபம் என்று போய், மீண்டும் நிஷாதத்தில் நீண்ட சஞ்சாரத்தில் ரசிகர்களை கட்டிப் போட்டு, பின்னர் ஷட்ஜத்தில் சேர்ந்து மத்யம கால நிரவலில் இறங்கியது, ஆலாபனை - தானம் ஆகியவற்றின் ஸுகங்களை உள்ளடக்கியதாக விளங்கியது.
கீழ்க்கால ஸ்வரத்தில் (மேல்ஸ்தாயி)காந்தாரமும் மத்யமமும் செவிக்கு அமுது.ஸர்வலகு ஸ்வரங்கள் காயத்ரியின் பலம். அன்றும் அவை அப்படியே.
நானும் ப்ரஸன்னாவும் சதுஸ்ர கதியும் திஸ்ர கதியும் சில ஸ்வாரஸ்யமான குறைப்புகளும் மேல் கால ஃபரன் களும், கண்ட ஜாதி மோராவும் எடுப்புக்குப் பொருத்தமான ஒரு கோர்வையுடன் வாசித்தோம்.
சஹானாவிலும் காபியிலும் "திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடயேன் ஆவேன்" என்று குலசேகர ஆழ்வார் (என்று நினைக்கிறேன்) விருத்தம் அதைத் தொடர்ந்து அன்னமாச்சார்யாவின் "ஜோ அச்யுதானந்த"வை விளம்ப காலத்தில் பாடினார்.
வசந்தா இராகத்தில் (ஆதி தாளம்) அம்மா சத்திரம் கண்ணுசாமி நட்டுவனாரின் தில்லானா, பின்னர் மங்களம்.
கச்சேரி துவங்கும் முன்னரே அரங்கம் நிரம்பியிருந்தது.
வெளியில் வந்தபோது உள்ளம் நிரம்பியிருந்தது.....
ஈரோடு நாகராஜன்.